×

தமிழிசை முழு ஒத்துழைப்போடு புதுச்சேரியில் ஆட்சி கவிழ்ப்பு எம்பி மாணிக்கம் தாகூர் பேட்டி

விருதுநகர்,பிப்.21: விருதுநகரில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் எம்பி மாணிக்கம் தாகூர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தை தொடர்ந்து எம்பி பேசுகையில், கரூரில் காந்தி சிலையை திடீரென அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய காங். எம்பி ஜோதிமணியை போலீசார், போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கர் கைக்கூலியை போல் செயல்பட்டு தாக்குதல் நடத்தியது கண்டிக்கத்தக்கது. எம்பி ஜோதிமணி காந்தி சிலையை மீட்டெடுப்பார். அருணாச்சல் துவங்கி மணிபூர், கோவா, மத்திய பிரதேசம், கர்நாடகா இப்போது பாண்டிச்சேரி உள்பட 8 மாநிலங்களில் மக்களால் நிராகரிக்கப்பட்ட பாஜக, மற்ற சட்டமன்ற உறுப்பினர்களை பணத்தால், சிபிஐயை காட்டி, பதவி ஆசை காட்டி ஆட்சி அமைக்கிறது. பாஜக கவர்னர் தமிழிசை முழு ஒத்துழைப்போடு பாண்டிச்சேரியில் ஆட்சி கவிழ்ப்பு நடைபெறுகிறதோ என்ற ஐயம் இருக்கிறது.

ராகுல் காந்தி சொல்வதை போல் பாஜக அரசு இருவரால் ஆன, இருவருக்கான அரசு. அதாவது மோடி, அமித்ஷாவால் ஆனா பாஜக அரசு அம்பானி, அதானியை நம்பியே இருக்கிறது என்பதை பிரதமரே ஒத்துக்கொண்டு நிருபித்து வருகிறார்.
பிப்.27,28, மார்ச் 1 தேதிகளில் தென்மாவட்டங்களில் தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ராகுல்காந்தியின் பிரசார பயணம் தமிழக அரசியலில் மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தும். தேவேந்திர குல மக்களுக்கு அதிகாரத்தில் பங்களிக்கும் இயக்கமாக காங்கிரஸ் கட்சி காமராஜர் காலம் துவங்கி இன்று வரை இருந்திருக்கிறது. இந்தியாவில் முதல் முறையாகவும், கடைசி முறையாகவும் இதுவரை இல்லாத அளவில் கேபினட் அமைச்சராக தேவேந்திர குல மக்களின் பிரதிநிதியாக இருந்தவர் அருணாசலம்.

டில்லியில் மிகப்பெரிய பொறுப்புகளில் வைத்து அழகு பார்த்தது காங்கிரஸ். பாஜக இதுவரை தேவேந்திர குல மக்கள் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட ஒருவருக்கு கூட் சீட் வழங்கவில்லை. நாடாளுமன்றத்தில், ராஜசபையில் சீட் வழங்கி அமைச்சராக்கி இருக்கலாம். தேர்தலுக்காக மோடி நடத்தும் ஏமாற்று வேலை. தேர்தல் வருவதால் சட்டம் கொண்டு வருவதாக ஒரு நகலை தாக்கல் செய்துள்ளனர். அதற்குள் பெரிய நாடகத்தை பிரதமர் நடத்துகின்றார். பிரதமரை பொறுத்த வரை தேர்தலுக்கான எந்த  வேடமும் போடக்கூடியவர். மோடியின் வேடத்தில் தேவேந்திர குல மக்கள் ஏமாற மாட்டார்கள். அதிமுகவிற்கு தேர்தலில் தோல்வி பயம் கண்ணில் தெரிவதால் அறிவிப்புகளை அறிவித்து வருவதாக தெரிவித்தார்.
உடன் காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் ஸ்ரீராஜா சொக்கர், ரெங்கசாமி, நிர்வாகிகள் பாலகிருஷ்ணசாமி, ஞானசேகரன், கிருஷ்ணமூர்த்தி, மீனாட்சி சுந்தரம் உள்பட பலர் இருந்தனர்.

Tags : MP Manikkam Tagore ,Puducherry ,
× RELATED புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை